தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் உள்ள பாரபத்தியில் இன்று நடைபெற்றது. இதற்காக பிரம்மாண்டமான மாநாட்டு திடல் அமைக்கப்பட்டது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்.
இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் தமிழ் இசையுடன் மாநாடு தொடங்கியது.
அப்போது மேடைக்கு வந்த தவெக தலைவர் விஜய், அங்கிருந்த தனது பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகியோரிடம் வாழ்த்து பெற்றார். பின்னர் மேடையில் இருந்த கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து தொண்டர்களை பார்ப்பதற்காக அமைக்கப்பட்ட 300 மீட்டர் நீளமுள்ள ‘ராம்ப் வாக்’கில் நடந்து சென்று தொண்டர்களை பார்த்து கை அசைத்தார். அப்போது சிலர் கட்சியின் துண்டுகளை அவர் மீது வீசினர். மேலும் சிலர் பாதுகாவலர்களின் தடுப்பை மீறி ‘ராம்ப் வாக்’ மீது ஏறி விஜய்க்கு மாலை அணிவிக்க வந்தனர். ஆனால் விஜய், அந்த மாலைகளை அவர்களுக்கே அணிவித்து திருப்பி அனுப்பினார்.
பின்னர் மேடையில் வைக்கப்பட்டிருந்த தலைவர்களின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய விஜய், அங்குள்ள கம்பத்தில் தவெகவின் கொடியை ஏற்றினார். தொடர்ந்து மக்களாட்சி, மதச்சார்பின்மை மற்றும் சமூகநீதியின் பெயரால் மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் தவெகவின் மதுரை மாவட்ட நிர்வாகிகள், விஜய்க்கு ஜல்லிக்கட்டு காளையை நினைவுப் பரிசாக வழங்கினர். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தலைமைச் செயலகத்தின் படத்தை விஜய்க்கு வழங்கினர்.
பின்னர் தவெக தலைவர் விஜய் பின்பு பேசியதாவது…
மதுரை என்றாலே நினைவுக்கு வருவது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம், மீனாட்சி திருக்கல்யாணம். சினிமா என்றாலுமே சரி அரசியல் என்றாலும் எனக்கு தலைவர் எம்ஜிஆர். அவரைப் போன்றவர் தான் விஜயகாந்த்.
1967, 1977 போல் 2026-ல் தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் உறுதியாக நிகழும். இது இந்த ஒற்றைத் தமிழனின் குரல் அல்ல. இது தமிழ்நாட்டின் குரல். நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்றார்கள். பெயர் அறிவித்தவுடன் பெயரை தானே அறிவித்து இருக்கிறார் என்றார்கள். மாநாடு என்று அறிவித்தவுடன் அதனை நடத்திக் காட்டட்டும் என்றார்கள்.
இந்த கூட்டம் ஓட்டுக்காக மட்டும் அல்ல. ஆட்சியாளர்களுக்கான வேட்டாகவும் மாறும். அரசியல் ஆதாயத்திற்காக நாம் இந்த கட்சியைத் தொடங்கவில்லை. கொள்கையில் என்றும் நமக்கு சமரசம் இல்லை. நமது ஒரே கொள்கை எதிரி பாஜக – அரசியல் எதிரி திமுக. பாசிச பாஜகவோடு உறவு வைத்துக் கொள்ள தவெக ஒன்றும் ஊழல் கட்சி அல்ல.
2026 தேர்தலில் எங்களை நம்பி வருபவர்களுக்கு ஆட்சியிலும் பங்கு வழங்கப்படும். அதிகாரத்திலும் பங்கு வழங்கப்படும். 2026-ல் திமுக மற்றும் தவெகவுக்கு தான் இடையே போட்டி.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் உள்ள குழந்தைகளின் தாய்மாமன் நான் தான். தமிழ்நாடு முழுவதும் நானே வேட்பாளர் என நினைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும். 234 தொகுதிகளிலும் உங்கள் சின்னம் விஜய் தான். தவெகவினர் மத்தியில் எந்த அரசியலும் நுழைய முடியாது. உங்களுக்காக உழைக்க வந்துள்ளேன். மக்களை மதிக்கிறேன். மக்களை வழிபடுகிறேன். மக்களுக்கு பணி செய்வதே எனது கடமை.
சினிமாவில் வாய்ப்பு இழந்த பிறகு அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை. படைக்கலத்துடன் அரசியலுக்கு வந்துள்ளேன். தமிழ்நாடு மக்கள் என்னை வீட்டில் ஒருவராக நினைக்கின்றனர். எனவே, இந்த மக்கள் கடவுள் எனக்குக் கொடுத்த வரம் என பேசினார்.