மலை மேல் உள்ள நக்கீரர் தீர்த்தத்தில் வேலுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலை மேல் உள்ள குமரருக்கு வேல் சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
திருப்பரங்குன்றத்தில் நக்கீரருக்கு சாப விமோசனம் கொடுக்க சுப்பிரமணிய சுவாமி தனது திருக்கரத்தில் உள்ள வேல் கொண்டு மலை மீதுள்ள பாறையில் கீரி, கங்கைக்கு நிகரான தீர்த்தத்தை சுனையில் உருவாக்கிய நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையிலும், மழை வேண்டியும், கோயில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கரத்தில் உள்ள தங்கவேல் மலை மேல் கொண்டு செல்லும் விழா ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை நடைபெறும்.
இந்த விழா கிராம மக்கள் சார்பில் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா இன்று நடைபெற்றது. முன்னதாக மூலஸ்தானத்தில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கரத்திலுள்ள வேலுக்கு கிராமத்தினர் சார்பில் பாலாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீப தூப ஆராதனைகள் நடைபெற்றன.
இதையடுத்து சுவாமியின் வேல் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. சிறப்பு பொதுபூஜை முடிந்து, கிராமத்தினருக்கு மரியாதை செய்யப்பட்டது. வேல் பல்லக்கில் வீதி உலா சென்று மலை மேல் கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள குமரன் கரத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
நக்கீரர் சுனை தீர்த்தத்தின் மேல், மலை பாறையின் அடிவாரத்திலுள்ள காசி விசுவநாதர், விசாலாட்சி, பஞ்சலிங்கம், நந்தி, சண்டிகேஸ்வரர், கால பைரவருக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் முடிந்து, கோயில் சிவாச்சாரியார்கள் வேலை சுனை தீர்த்தத்தில் எடுத்துச் சென்று பால், சந்தனம், விபூதி உள்ளிட்ட 16 வகை திரவிய அபிஷேகங்கள் செய்தனர்.
கிராமத்தினர் சார்பில் அரிசியிலான கதம்ப சாதம், பாயாசம் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த விழாவில் திருப்பரங்குன்றம் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து சுவாமியின் தங்கவேல் மலையடிவாரத்தில் உள்ள பழனி ஆண்டவர் சன்னதிக்கு கொண்டுவரப்பட்டு, அங்கு பழனியாண்டவருக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று, வேல் சாற்றி சிறப்பு தீப, தூப ஆராதனைகள் நடைபெற்றது.
இதை அடுத்து இரவு 7 மணி அளவில் பூ பல்லக்கில் வேல் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்டு, மூலவர் சுப்பிரமணிய சுவாமியின் திருக்கரத்தில் சேர்க்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா பாலாஜி, அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், பொம்மை தேவன், ராமையா மற்றும் திருக்கோயில் துணை ஆணையர் நாராயணன், கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.