விக்கிரவாண்டி வி.சாலையில் கிளம்பிய அதிர்வலை, மதுரை-தூத்துக்குடி நெடுஞ்சாலையில் தற்போது நிலை கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான தொண்டர்களின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கிறது மாநாட்டுத் திடல்.
மாநாட்டுத் திடல் முழுவதும் விரிக்கப்பட்ட பச்சை விரிப்பால் பச்சைப் பசேலென்று காட்சியளிக்கிறது. சுமார் 2 லட்சம் பேர் அமரும் வண்ணம் இருக்கைகள் போடப்பட உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். மேடை நிகழ்வுகளைக் காணும் வகையில் மாநாட்டுத் திடலில் சுமார் 50க்கும் மேற்பட்ட பிரம்மாண்டமான எல்ஈடி ஸ்கிரீன்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
மேடையிலிருந்து பார்வையாளர்கள் மத்தியில் தவெக தலைவர் விஜய் ‘ராம்ப் வாக்’ செல்லும் வகையில் சுமார் 10 அடி உயரத்தில் 300 மீட்டர் நீளத்தில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 21-ஆம் தேதி மாலை 3.30 மணிக்குத் துவங்கும் நிகழ்ச்சி மாலை 7 மணி அளவில் நிறைவு பெறும்.
மாநாட்டு நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினரும், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளருமான முரளிதரன் கூறுகையில், ‘மாநாட்டின் பிரம்மாண்டம் வியக்க வைக்கிறது. கடந்த விக்கிரவாண்டி மாநாட்டில் இருந்த ஒரு சில குறைகள் இங்கே முழுவதுமாக தவிர்க்கப்பட்டுள்ளன.
குடிநீர் வசதி மட்டுமன்றி அவசர மருத்துவ உதவிக்கும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எங்கள் மாவட்டத்திலிருந்தும்கூட மருத்துவர் குழு வந்துள்ளது. பல்வேறு தடைகளைக் கடந்து மதுரை மாநாடு நடைபெறுகிறது.
தமிழகத்தில் பேச்சுரிமைகூட மறுக்கப்படுகிறது. அவற்றையெல்லாம் தகர்த்து மிகப் பெரிய இயக்கமாக நாங்கள் இருக்கிறோம் என்பதை இந்த மாநாடு வெளிக்காட்டும். தமிழ்நாடே திரும்பிப் பார்க்கும் மாநாடாக இது அமையும்’ என்றார்.
மாநாட்டுத் திடலின் இரண்டு பக்கமும் அம்பேத்கர், காமராஜர், பெரியார், அஞ்சலை அம்மாள், வேலு நாச்சியார் ஆகியோரின் பிரம்மாண்ட கட்அவுட்கள் இடம்பெறுகின்றன. மேலும் மாநாட்டு முழக்கமான ‘வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு’ என்ற வாசகம் மேடையின் இடது புறத்தில் அமைக்கப்பட்டுள்ளது.