நியோமேக்ஸ் குழுமத்தைச் சேர்ந்த 33 நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்த தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (NCLT) உத்தரவிட்டுள்ளதாக முதலீட்டாளர் சிவதர்ஷினி மதுரையில் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் (NCLT) பிரிவு அமர்வு-1 விசாரணையில், நியோமேக்ஸ் குழுமத்துடன் தொடர்புடைய 'Safro Realty Private Limited' உள்ளிட்ட நிறுவனங்கள் மீதான மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனை விசாரித்த தீர்ப்பாயம், நிறுவனங்களின் கட்டமைப்பு, நிதிப் பரிமாற்றங்கள், சொத்து வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல் உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்துப் பிரிவு 213-ன் கீழ் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் முதலீட்டாளர் சிவதர்ஷினி பேட்டி:
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முதலீட்டாளர் சிவதர்ஷினி, தான் பல்வேறு நிறுவனங்களில் மொத்தம் ரூ.2.02 கோடி முதலீடு செய்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், "இந்திய அரசின் அனுமதி பெற்ற நிறுவனம் என்ற அடிப்படையில்தான் இதில் முதலீடு செய்தோம். ஆனால், தற்போது குறைந்த வழிகாட்டி மதிப்புள்ள நிலங்களை முதலீட்டாளர்களின் தலையில் கட்டப் பார்க்கிறார்கள்; அந்த இழப்பீடு எங்களுக்கு ஏற்புடையதல்ல. நாங்கள் கட்டிய பணத்தை எங்களுக்கு முழுமையாகத் திரும்பத் தந்தாலே போதுமானது" என்று வேதனையுடன் தெரிவித்தார்.
பொதுமக்களிடம் அதிக வருமானம் தருவதாகக் கூறிப் பணம் பெறப்பட்டதாகக் கூறப்படும் இந்த வழக்கு, அடுத்த கட்ட விசாரணைக்காக வரும் அக்டோபர் 14-ஆம் தேதிக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.
- Madurai
நியோமேக்ஸ் குழும நிறுவனங்கள் மீது விசாரணைக்கு உத்தரவு
நியோமேக்ஸ் குழும நிறுவனங்கள் மீது விசாரணைக்கு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது
