விருதுநகர் மாவட்டம், தளவாய்புரத்தில் செயல்பட்டு வரும் மகளிர் தொழிற்கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் குறித்துச் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தலைமையில் நடைபெற்றது.
தையல் தொழிற்கூட்டுறவு சங்கம்: தளவாய்புரத்தில் உள்ள அன்னை சத்யா பெண்கள் தையல் தொழிலாளர்கள் தொழிற்கூட்டுறவு சங்கம் மூலம், 2026-2027 கல்வியாண்டிற்கான இலவச சீருடைத் திட்டத்தின்கீழ் இராஜபாளையம் மற்றும் சிவகாசி கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த 271 அரசுப் பள்ளிகளைச் சார்ந்த 20,565 மாணவ, மாணவியர்களுக்குச் சீருடைகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு அவர்களின் பணியின் அடிப்படையில் ரூ.5,000 முதல் ரூ.35,000 வரை வருமானம் ஈட்டி வருவதுடன், அவர்களின் பணிச்சூழல் குறித்தும் அமைச்சர் நேரில் கேட்டறிந்தார்.
இணை உணவு தயாரிப்பு மையம்: கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் வளரிளம் பெண்களுக்கான இணை உணவு மற்றும் சத்துமாவு தயாரிக்கும் முறைகள், தரக்கட்டுப்பாட்டு நடைமுறைகள் மற்றும் சுகாதார நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் 25,191 வளரிளம் பெண்களும், 14,888 கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களும் இதன் மூலம் பயனடைந்து வருகின்றனர்.
பெண்கள் தங்களது திறன்களை மேம்படுத்திப் பொருளாதார ரீதியாக முன்னேறுவதில் இக்கூட்டுறவு சங்கங்கள் முக்கியப் பங்காற்றி வருவதாக அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் திலகம் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
- Virudhunagar
தளவாய்புரத்தில் கூட்டுறவு சங்கங்கள் செயல்பாடு ஆய்வு
தளவாய்புரத்தில் கூட்டுறவு சங்கங்கள் செயல்பாடு குறித்து அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி ஆய்வு
