மதுரை விளாங்குடி காமாட்சியம்மன் கோவிலில் நடைபெற்ற ரூ.23 லட்சம் நன்கொடை வசூல் முறைகேடு தொடர்பாக, உயர்நீதிமன்ற உத்தரவின்படி தக்கார் உள்ளிட்டோர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக் கோரி வழிபாட்டு திருப்பணி நலச்சங்கத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கடந்த 2020-ஆம் ஆண்டு அறநிலையத்துறையின் அனுமதியின்றி அச்சு ரசீதுகள் மூலம் வசூலிக்கப்பட்ட ரூ.23 லட்சம் நிதியில் முறைகேடு நடந்ததாகப் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து அப்போதைய தக்கார் ரேவதி அளித்த புகாரில், சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கடிதம் பெறப்பட்டுவிட்டதாகக் கூறி மேல்நடவடிக்கை கைவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட ஆவணங்களைக் கொண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தொடரப்பட்ட வழக்கில், கூடல்புதூர் காவல் ஆய்வாளரும், அறநிலையத்துறை உதவி ஆணையரும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறிய மனுதாரர்கள், முறைகேட்டை மறைக்க முயன்ற முன்னாள் தக்கார் ரேவதி மற்றும் தொடர்புடைய நபர்கள் மீது உடனடியாகச் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
கோயில் நிதியில் நடைபெற்ற முறைகேடு புகாரில் உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரி அளிக்கப்பட்ட இந்த மனு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- Madurai
விளாங்குடி காமாட்சியம்மன் கோவில் நன்கொடை முறைகேடு
விளாங்குடி காமாட்சியம்மன் கோயில் ரூ.23 லட்சம் நன்கொடை முறைகேடு – நடவடிக்கை கோரி கலெக்டரிடம் மனு
