மதுரை அண்ணாநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய ஹஜ் சங்கத் தலைவர் அபூபக்கர் பல முக்கிய கோரிக்கைகளையும் கருத்துக்களையும் முன்வைத்துள்ளார்.
இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொண்டதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவுக்கு இரண்டு சிறப்பு விருதுகளை வழங்கியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்த அவர், 2027 ஆம் ஆண்டுக்கான அரசு ஹஜ் குலுக்கல் முறை முடிவடைந்துள்ளதால், தனியார் மூலம் செல்ல விரும்புவோர் இப்போதே பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், பிற மாவட்டங்களிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்வோர் சென்னை வந்து செல்ல வேண்டியுள்ளதால், மதுரையிலிருந்து மதீனாவிற்கு நேரடியாக விமான சேவையை இயக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டு வரும் ஹஜ் யாத்திரிகள் தங்கும் விடுதி அடுத்த ஆண்டு மே மாதம் நிறைவடைந்ததும் முதல்வரால் திறந்து வைக்கப்படும் எனவும், இதேபோன்று மதுரையிலும் ஹஜ் யாத்திரிகள் தங்க விடுதி கட்ட அரசு முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
இதனிடையே அரசியல் குறித்தும் பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி பிரமாதமாக இருப்பதாகவும், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் வட மாநிலங்களில் கூட நடிகர் விஜயை 'தளபதி' என்றுதான் பேசி வருவதாகவும் குறிப்பிட்டார். இறுதியாக, நாட்டின் அனைத்துப் பகுதி இசுலாமியர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் மத்திய அமைச்சரவையில் இசுலாமியர் ஒருவருக்கு மத்திய அரசு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அபூபக்கர் தனது பேட்டியின்போது கேட்டுக்கொண்டார்.
- Madurai
மதுரையிலிருந்து மதீனாவிற்கு நேரடி விமானம்
மதுரையிலிருந்து மதீனாவிற்கு நேரடி விமானம் இயக்கக் கோரிக்கை
