• Home  
  • ஆய்வின் பெயரில் கெடுபிடி – ஆட்சியரிடம் புகார்
- Virudhunagar

ஆய்வின் பெயரில் கெடுபிடி – ஆட்சியரிடம் புகார்

ஆய்வின் பெயரில் கெடுபிடி – ஆட்சியரிடம் சிவகாசி பட்டாசு வணிகர்கள் புகார்

சிவகாசியில் உரிமம் பெற்று முறையாகச் செயல்படும் பட்டாசு கடைகளில், அதிகாரிகள் 'ஆய்வு' என்ற பெயரில் கடுமையான நெருக்கடி தருவதாகக் குற்றம்சாட்டி, பட்டாசு விற்பனையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோதப் பட்டாசுத் தயாரிப்பு மற்றும் பதுக்கலைத் தடுக்கும் நோக்கில் வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, உரிமம் பெற்று முறைப்படி கடை நடத்தி வரும் தங்களை அதிகாரிகள் தவறான கண்ணோட்டத்தில் அணுகுவதாக 'விருதுநகர் மாவட்ட முதல் தலைமுறை பட்டாசு வணிகர்கள் நலச் சங்கத்தினர்' வேதனை தெரிவித்துள்ளனர்.

சின்னச் சின்னக் காரணங்களைச் சுட்டிக்காட்டி வழக்குப்பதிவு செய்வது, கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவது மற்றும் பட்டாசுகளைப் பறிமுதல் செய்வது போன்ற செயல்களால் தொடர்ந்து கடைகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டனர்.

இதுகுறித்து அச்சமின்றித் தொழில் செய்ய உரிய சூழலை ஏற்படுத்தித் தரக் கோரி, சங்கத் தலைவர் தாமஸ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பட்டாசு வணிகர்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ராவை நேரில் சந்தித்து முறையீட்டு மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், இதுகுறித்துச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

BARN Media  @2026. All Rights Reserved.