இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குந்தலப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா சிறப்புப் பார்வையாளராகக் கலந்துகொண்டார்.
தூய்மைப் பணியாளர்களுக்குப் பொன்னாடை அணிவித்துச் சிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்கள், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் தாது உப்புக்கலவைகள், தோட்டக்கலைத்துறை மூலம் மரக்கன்றுகள் மற்றும் விதைகளும், 5 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.60 லட்சம் மதிப்பில் கடன் உதவிகளும் என மொத்தம் 15 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
வெற்றி இல்லம் திட்டம்: தமிழக அரசின் சார்பில் புதிதாகச் செயல்படுத்தப்பட உள்ள 'வெற்றி இல்லம்' திட்டத்தின் கீழ், வீடு இல்லாமல் சொந்த இடம் வைத்துள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரூ.5 லட்சம் வரை நிதியுதவி பெற்றுப் பயனடையலாம் என ஆட்சியர் தெரிவித்தார். மேலும், பொதுமக்கள் விடுத்த குடிநீர் மற்றும் அங்கன்வாடி மையம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
ஊராட்சி நிர்வாகத்தின் பொதுநிதி செலவினங்கள், தணிக்கை அறிக்கை, குடிநீர் விநியோகம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் ஜல் ஜீவன் திட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து குழந்தை தொழிலாளர் மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழியும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வானதி, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் கனகராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் இக்கூட்டத்தில் உடன் இருந்தனர்.
- Virudhunagar
குந்தலப்பட்டி கிராம சபைக் கூட்டம் ஆட்சியர் பங்கேற்பு
குந்தலப்பட்டி கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா பங்கேற்பு
