• Home  
  • செம்பட்டி நபர் கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்
- Dindigul

செம்பட்டி நபர் கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்

செம்பட்டி நபர் கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல் – 4 பேரிடம் தீவிர விசாரணை

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலைச் சம்பவம் தொடர்பாக 4 பேரைப் பிடித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், திருமங்கலம் அருகே பாழடைந்த தண்ணீர் தொட்டியில் வீசப்பட்ட அவரது உடலை 15 நாட்களுக்குப் பிறகு மீட்டுக் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள சீவல்சரகு கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கிலிமுருகன் (38). கட்டிடத் தொழிலாளியான இவர், கடந்த 29-ஆம் தேதி அன்று தனது நண்பர்கள் 4 பேருடன் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் காரில் கடத்தப்பட்டார். இது குறித்து அவரது தம்பி முத்துப்பாண்டி செம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் கடந்த 10-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

நேற்று மாலை சீவல்சரகு பகுதியில் சுற்றிய கடத்தல் கும்பலைச் சங்கிலி முருகனின் தம்பி முத்துப்பாண்டி மடக்கிப் பிடித்துக் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தார். உடனடியாகச் செயல்பட்ட செம்பட்டி காவல்துறையினர் 4 பேரையும் பிடித்துக் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சங்கிலி முருகனை காரில் கடத்திச் செல்லும் வழியிலேயே கழுத்து மற்றும் வயிறு பகுதியில் குத்தி கொலை செய்து, திருமங்கலம் அருகே ஆஸ்டினம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உச்சப்பட்டி பகுதியில் உள்ள பயன்பாட்டில் இல்லாத தண்ணீர் தொட்டியில் உடலை வீசியதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

இந்தத் தகவலின் அடிப்படையில் செம்பட்டி காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று, கொலை செய்யப்பட்டு 15 நாட்களான நிலையில் சங்கிலி முருகனின் உடலை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திண்டுக்கல் ஏ.டி.எஸ்.பி. தெய்வம் தலைமையில் இந்தக் கொலைக்கான உண்மையான காரணம் குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.