மதுரை திருப்பரங்குன்றம் அருகே முத்துப்பட்டியில் காளியம்மன் கோவில் திருவிழா நடத்த அறநிலையத்துறை ஒத்துழைப்பு அளிக்கக் கோரி கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை திருப்பரங்குன்றம் அருகிலுள்ள முத்துப்பட்டியில் 200 ஆண்டுகள் பழமையான கிராம பொதுமக்களுக்குச் சொந்தமான காளியம்மன் கோவில் உள்ளது. கடந்த ஆண்டு இக்கோவிலுக்குக் குடமுழுக்கு நடைபெற்ற நிலையில், இது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு கோவில் திருவிழாக்கள் மற்றும் பூஜைகள் நடத்துவதில் அறநிலையத்துறைக்கும் கிராம மக்களுக்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவி வந்தது.
இந்த ஆண்டு ஆடி மாதத் திருவிழாவை நடத்துவதற்காக 25 நாட்களுக்கு முன்பே அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அறநிலையத்துறை தரப்பிலிருந்து எந்தவித ஒத்துழைப்பும் வழங்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதைக் கண்டித்து கோவில் முன்பு பொங்கல் வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள், திடீரென அவ்வழியாக வந்த அரசுப் பேருந்தை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பмо, மறியலில் ஈடுபட்ட பெண்கள் சாமி வந்தது போல் ஆடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காளியம்மன் கோவில் திருவிழாவை நடத்த அறநிலையத்துறை உரிய ஒத்துழைப்பு வழங்கும் வரை போராட்டம் தொடரும் என கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.
- Madurai
திருப்பரங்குன்றம் அருகே சாலை மறியல்
திருப்பரங்குன்றம் அருகே சாலை மறியல் – கிராம மக்கள் போராட்டம்
