• Home  
  • சுதந்திர தினத்துடன் பிறந்த வைகை எக்ஸ்பிரஸ்
- Madurai

சுதந்திர தினத்துடன் பிறந்த வைகை எக்ஸ்பிரஸ்

சுதந்திர தினத்துடன் பிறந்த வைகை எக்ஸ்பிரஸ் – மதுரை ரயில் நிலையத்தில் 49-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதியன்று பிறந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வைகை எக்ஸ்பிரஸ் ரயில், தனது 49-வது பிறந்தநாளை இன்று மதுரை ரயில் நிலையத்தில் ரயில் ஆர்வலர்கள் மற்றும் பயணிகளுடன் இணைந்து உற்சாகமாகக் கொண்டாடியது.

தென்மாவட்ட மக்களின் மிக முக்கியமான பகல் நேரப் போக்குவரத்துச் சாதனமாக விளங்கும் வைகை எக்ஸ்பிரஸ், கடந்த 1977-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று மதுரை - சென்னை இடையே தனது முதல் சேவையைத் தொடங்கியது.

வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் 49-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை ரயில் நிலையத்தில் பயணிகள் மற்றும் ரயில் ஆர்வலர்கள் ஒன்றுகூடி ரயிலுக்கு மாலை அணிவித்து, அலங்காரம் செய்து, தேங்காய் உடைத்து, தீபம் காட்டி சிறப்பு வழிபாடுகள் செய்தனர்.

ரயிலின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் கேக் வெட்டப்பட்டதுடன், ரயில்வே ஊழியர்கள் மற்றும் பயணிகள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கித் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் மணிக்கு 105 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்ட இந்தியாவின் அதிவேக மீட்டர் கேஜ் ரயில்களில் ஒன்றாக வைகை எக்ஸ்பிரஸ் திகழ்ந்தது. பின்னர் அகலப்பாதையாக மாற்றப்பட்டு, தற்போது நவீன LHB பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது.

சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்து 48 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து, இன்று 49-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள வைகை எக்ஸ்பிரஸ், தென்மாவட்ட மக்களின் அத்தியாவசியப் பயணத் தோழனாகத் தொடர்ந்து சிறப்பான சேவையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

BARN Media  @2026. All Rights Reserved.