மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச. கீர்த்தனா மற்றும் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி ஆகியோர் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. பி. செல்வம் முன்னிலையில் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ. சுபபுத்ரா தலைமையில், விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூர் எ.எ.எ. பொறியியல் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேசிய தொழில் துறை அமைச்சர் செல்வி ச. கீர்த்தனா, இளைஞர்கள் தங்களது திறமைக்கேற்ப வேலைவாய்ப்புகளைப் பெறுவதோடு நின்றுவிடாமல், தொழில்முனைவோர்களாக உயர்ந்து பலருக்கு வேலைவாய்ப்பு அளிப்பவர்களாக மாற வேண்டும் எனத் கேட்டுக் கொண்டார். மேலும், தமிழ்நாட்டில் ஈர்க்கப்பட்டுள்ள தொழில் முதலீடுகள் வாயிலாக எதிர்காலத்தில் கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி பேசுகையில், படித்த இளைஞர்களுக்குத் திறன் வளர்ப்பு மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக அரசு பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்து வருவதாகத் தெரிவித்தார். மாநிலம் முழுவதும் இதுவரை நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் இணையதளப் பதிவுகள் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்துள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்றும் வகையில் 'கதிரதிகாரம்' திட்டம் செயல்படுத்தப்பட்டு, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரியும் ஆணை வழங்கப்பட்டுள்ளதையும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இளைஞர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களையும் அவர் எடுத்துரைத்தார்.
இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களது நிறுவனங்களுக்குத் தேவையான பணியாளர்களைத் தேர்வு செய்தன. முகாமின் இறுதியில் தகுதிபெற்ற வேலைநாடுநர்களுக்கு அமைச்சர்கள் பணிநியமன ஆணைகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் அரசு உயர் அலுவலர்கள் மற்றும் ஏராளமான வேலைநாடுநர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
- Virudhunagar
ஏ.ஏ.ஏ. பொறியியல் கல்லுரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
விருதுநகர் அருகே ஆமத்தூர், எ.எ.எ. பொறியியல் கல்லுரியில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாம்
