மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட பிரபல திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், கடச்சனேந்தல் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்குத் தனது பெற்றோருடன் சென்று, குழந்தைகளுடன் அமர்ந்து விளையாடி மகிழ்ந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிப் பரவி வருகிறது.
'பீட்சா', 'ஜிகர்தண்டா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், தற்போது கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இளையராஜா இசையில் உருவாகியுள்ள 'டோரதி' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் இந்த மாத இறுதியில் வெளியாக உள்ள நிலையில், அவர் மதுரை கடச்சனேந்தல் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் பள்ளிக்குச் சென்றுள்ளார்.
தங்களது பெற்றோருடனும், 'டோரதி' படத்தில் நடித்துள்ள நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த் ஆகியோருடனும் சென்ற இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், அங்குள்ள குழந்தைகளோடு குழந்தைகளாய்த் தரையில் அமர்ந்து அவர்களுடன் விளையாடி, உரையாடி, அவர்களுக்கு உணவும் வழங்கித் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
சினிமாப் பிரபலங்கள் மத்தியில் எளிமையாகவும் மனிதநேயத்துடனும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட்ட இந்த நெகிழ்ச்சியான தருணத்தின் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் பலரது பாராட்டுக்களையும் பெற்று வைரலாகி வருகிறது.
- Madurai
ஆதரவற்ற குழந்தைகளின் பள்ளிக்குச் சென்ற ‘டோரதி’ இயக்குநர்
ஆதரவற்ற குழந்தைகளின் பள்ளிக்குச் சென்ற ‘டோரதி’ இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்
