மதுரையில் காலமான பிரபல தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா அவர்களின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பட்டிமன்றப் பேச்சாளர் திண்டுக்கல் லியோனி, அவரது பாதங்களைத் தொட்டு வணங்கி கதறி அழுதுவிட்டு, அவருக்குத் தமிழக அரசு உடனடியாக அரசு மரியாதை செலுத்த வேண்டும் எனத் கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை ஞானஒளிபுரத்தில் உள்ள சாலமன் பாப்பையா அவர்களின் இல்லத்திற்கு வந்த திண்டுக்கல் லியோனி, அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அவரது பாதங்களைத் தொட்டு வணங்கி, "நான் வளர்த்த பிள்ளை என்று சொல்வீர்களே ஐயா..." எனக் கதறி அழுது அவர் செலுத்திய இறுதி மரியாதை அங்கிருந்த அனைவரையும் கண்கலங்கச் செய்தது.
"தமிழ் அன்னை தன் மகனை இழந்து வாடுகிறாள்" எனத் தெரிவித்த அவர், தான் அறிவியல் ஆசிரியராக இருந்தபோது தன் திறமையை அங்கீகரித்து வழிதுணையாக நின்றவர் சாலமன் பாப்பையா என்றும், பட்டிமன்றங்கள் மட்டுமல்லாமல் சங்க இலக்கியங்களையும் திருக்குறளையும் எளிய முறையில் மக்களுக்குக் கொண்டு சேர்த்தவர் என்றும் புகழாரம் சூட்டினார்.
தமிழுக்காகவே தன் வாழ்நாளில் 60 ஆண்டுகளை அர்ப்பணித்த ஐயா சாலமன் பாப்பையா அவர்களுக்குத் தமிழக அரசு முழு அரசு மரியாதை செலுத்த வேண்டும் என்றும், இதற்கான நடவடிக்கைகளை மாண்புமிகு முதலமைச்சரும் செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சரும் உடனடியாக எடுக்க வேண்டும் என உலகம் முழுவதிலுமுள்ள இலக்கியவாதிகள் மற்றும் தமிழார்வலர்கள் சார்பில் கேட்டுக்கொள்வதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
- Madurai
சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை வழங்க வேண்டும் – லியோனி
மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை வழங்க வேண்டும் – திண்டுக்கல் லியோனி
