• Home  
  • மதுரையில் பழமையான சென்ட்ரல் திரையரங்கில் தீ விபத்து
- Madurai

மதுரையில் பழமையான சென்ட்ரல் திரையரங்கில் தீ விபத்து

மீனாட்சி அம்மன் கோயில் அருகில் உள்ள பழமையான சென்ட்ரல் திரையரங்கில் பயங்கர தீ விபத்து

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மேற்கு கோபுரத்திற்கு மிக அருகில் உள்ள பழமையான சென்ட்ரல் திரையரங்க வளாகத்தில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபட்டால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரையின் மிகவும் பழமையான திரையரங்குகளில் ஒன்றான சென்ட்ரல் திரையரங்கம், கடந்த கொரோனா காலத்தில் மூடப்பட்டது. அதன்பின்னர் திரைப்படங்கள் திரையிடப்படாமல், வட மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் மற்றும் இதரப் பொருட்கள் சேமித்து வைக்கப்படும் கிடங்காகவும், கார் பார்க்கிங் பகுதியாகவும் பயன்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், இன்று மாலை திடீரென திரையரங்க வளாகத்தில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. தீ மளமளவெனப் பரவி அதிகளவில் கரும்புகை வெளியேறியதால் அப்பகுதியில் பெரும் பீதியும் பரபரப்பும் ஏற்பட்டது.

தற்போது மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருவதால், மதுரைக்கு வருகை தந்துள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் கூட்டத்தால் கோயில் பகுதியே ஸ்தம்பித்திருந்தது. இந்நிலையில் கோயிலின் மேற்கு கோபுரத்திற்கு அருகிலேயே தீ விபத்து ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் அறிந்தவுடன் 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர், தண்ணீரைப் பீய்ச்சியடித்துத் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கிடங்கில் இருந்த பிளாஸ்டிக் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் தீயில் எரிந்திருக்கக்கூடும் என அஞ்சப்படும் நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.