சிவகாசி மாநகராட்சியில் சுமார் இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு நடைபெற்ற அவசரக் கூட்டத்தில், லஞ்சப் புகார், ஏசி இயந்திரம் இடமாற்றம் மற்றும் வெளிமாவட்ட ஆள்சேர்ப்பு முறைகேடு குற்றச்சாட்டுகளால் பெரும் அமளி துமளி ஏற்பட்டதுடன், 30 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
திருத்தங்கல் கருப்பசாமி நகரில் பேப்பர் கப் கம்பெனி நடத்தி வரும் வீரபாண்டி என்பவர் கூட்டரங்கில் மேயர் முன்னிலையில் திடீரெனத் தர்ணாவில் ஈடுபட்டார். கடந்த 2024-ஆம் ஆண்டு திருத்தங்கல் சுகாதார அலுவலர் தன்னிடம் ரூ. 50,000 லஞ்சமாகப் பெற்றுக்கொண்டு தன்னை மிரட்டி வருவதாகவும், அந்தப் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்றும் அவர் கண்ணீருடன் கோரிக்கை வைத்தார். இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் பதிலளித்தார்.
கூட்டரங்கில் இருந்த ஏசி இயந்திரத்தைக் கமிஷனர் வீட்டிற்கு மாற்றியதாகவும், அதுவும் மாநகராட்சி ஊழியர்களைத் தவிர்த்து விடுமுறை நாளில் வெளியிலிருந்து எலக்ட்ரீசியனை வரவழைத்து எடுத்துச் சென்றதாகவும் 44-வது வார்டு கவுன்சிலர் பாண்டிஸ்வரி பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். இதற்கு அதிகாரிகள் தரப்பிலிருந்து முறையான பதில் அளிக்கப்படவில்லை.
குப்பை சேகரிப்புப் பணி மேற்பார்வையாளர் (பரப்புரையாளர்) நியமனத்தில் 8 பேரிடம் தலா ரூ. 2 லட்சம் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகவும், விருதுநகர் மாவட்ட இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறித்துவிட்டுத் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பணி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறி 30 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பெரும்பான்மை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததன் காரணமாகக் கூட்டத்தை நடத்துவதற்கான குறைந்தபட்ச உறுப்பினர்கள் எண்ணிக்கை இல்லாததால், எந்தவொரு தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் அவசரக் கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
- Virudhunagar
சிவகாசி மாநகராட்சி அவசரக் கூட்டம்
சிவகாசி மாநகராட்சி அவசரக் கூட்டம் – லஞ்சப் புகார், ஏசி விவகாரம் – கவுன்சிலர்கள் வெளிநடப்பு & அமளி
