விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகளுக்குத் தேவையான கணினி திருத்த பட்டாக்களை மாவட்ட ஆட்சியர் நேரில் வழங்கினார். மேலும், கடந்த கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
விவசாயிகளுக்கான 2024-2025-ஆம் ஆண்டிற்கான கரும்பு ஊக்கத்தொகை முழுமையாக வழங்கப்பட்டுவிட்டதாகவும், நடப்பாண்டிற்கான ஊக்கத்தொகை அரசாணை பெறப்பட்டவுடன் வழங்கப்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்தார்.
UDR பிழைகளைத் திருத்துவது, அடங்கல் சான்றிதழை விரைந்து வழங்குவது, வனவிலங்குகளால் ஏற்படும் பயிர்ச் சேதத்தைத் தடுத்தல், கூடுமானவரை கண்மாய்களைத் தூர்வாருவது மற்றும் மாம்பழ கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைகளை நிறுவுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
மேலும், மாவட்டத்தில் 8,711 மெட்ரிக் டன் அளவுக்குப் பல்வேறு வகையான உரங்கள் இருப்பு உள்ளதாகவும், விவசாயிகள் இதனைப் பெற்றுப் பயனடையலாம் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தெரிவித்தார்.
- Virudhunagar
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
