விருதுநகரில் தனியார் திருமண மண்டபத்தில் திமுக வடக்கு மற்றும் தெற்கு மாவட்டக் கழகங்களின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சி மறுசீரமைப்பு மற்றும் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்கள் குறித்து முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
மாவட்டப் பொறுப்பாளர்களான மாநில இளைஞரணி இணைச் செயலாளர் இன்பா ரகு மற்றும் தென்காசி எம்.எல்.ஏ. கலை கதிரவன் ஆகியோர் தலைமையேற்ற இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தென்காசி எம்.பி. ராணி குமார், சாத்தூர் எம்.எல்.ஏ. கடற்கரைராஜ், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா, விருதுநகர் நகராட்சி தலைவர் மாதவன் மற்றும் ஏராளமான மாவட்ட, மாநில, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
திமுக இயக்கத்தை மறுசீரமைக்கும் முகமாகத் தலைவர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளதாகவும், விருதுநகர் மாவட்டத்தில் எல்லைகளை வரையறுத்து அனைவரும் களப்பணியாற்ற வேண்டும் எனவும் தங்கம் தென்னரசு கேட்டுக்கொண்டார்.
கட்சியில் இளைஞர்களுக்குப் பொறுப்புகள் வழங்கப்படும்போது எவ்வித கருத்து வேறுபாடுகளும் இருக்கக் கூடாது எனவும், முரண்பாடுகளைத் தாண்டி அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் எனவும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வலியுறுத்தினார். மேலும், விரைவில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களையும் இடைத்தேர்தல்களையும் எதிர்கொண்டு வெற்றிபெறத் தயாராகுமாறு நிர்வாகிகளைக் கேட்டுக் கொண்டார்
- Virudhunagar
திமுக வடக்கு மற்றும் தெற்கு மாவட்டச் செயற்குழுக் கூட்டம்
விருதுநகரில் திமுக வடக்கு மற்றும் தெற்கு மாவட்டச் செயற்குழுக் கூட்டம்
