விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கடமையில் ஈடுபட்டிருந்த பெண் உதவி தோட்டக்கலை அலுவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து, குற்றவாளியைக் உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட தோட்டக்கலை மற்றும் வேளாண் அலுவலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா ஆர்.கல்லுமடம் ஊரைச் சேர்ந்த கலைவாணி (26), எம்.ரெட்டியபட்டி வேளாண் விரிவாக்க மையத்தில் உதவி தோட்டக்கலை அலுவலராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் மேலபாறைகுளம் கிராமத்தில் புஞ்சைக் காட்டை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அவரது கழுத்தைப் பிடித்துத் தாக்கியதுடன், அணிந்திருந்த நகையைப் பறிக்கவும் முயன்றுள்ளார்.
அந்த நபரிடமிருந்து தப்பியோடிய கலைவாணி, இது குறித்து பரளச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, நேற்று மாலை உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் பரமசிவம், மாவட்ட பொருளாளர் பொன்முடி உள்ளிட்ட நிர்வாகி கள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து முறையிட்டனர். இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்ற போதிலும், அது தோல்வியில் முடிந்தது.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் ஆத்திரமடைந்த அலுவலர்கள், நேற்று இரவு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
- Virudhunagar
பெண் உதவி அலுவலர் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
பெண் உதவி தோட்டக்கலை அலுவலர் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
