மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இலவச நவீன உடற்பயிற்சி கூடத்தைத் திறந்து வைத்து செய்தியாளர்களிடம் பேசிய மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ. முஸ்தபா, தி.மு.க. அரசை கடுமையாக விமர்சித்ததுடன், கோவில் விவகாரங்கள் குறித்துப் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்தார்.
மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் கவுன்சிலர் ஜெயச்சந்திரன் ஏற்பாட்டில் முதன்முறையாகக் கொண்டுவரப்பட்ட இலவச நவீன உடற்பயிற்சி கூடத்தை மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ. முஸ்தபா பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார்.
தி.மு.க.வினர் கோயில்களை வைத்து அரசியல் செய்வதாகக் குற்றம் சாட்டிய அவர், கும்பாபிஷேகப் பணிகள் முறையாகச் செய்யப்பட்டதாகவும், விழாவில் தமிழில் ஓதுவார்கள் ஓதியதை வைத்து தி.மு.க. அரசியல் செய்ய முயன்றதாகவும் தெரிவித்தார்.
மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் மத அடையாளத்தோடு சென்றது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக நான் இருக்கிறேன். ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணிதான் என் மீது வேண்டுமென்றே பிரச்சினையை ஏற்படுத்துகிறார்கள். இஸ்லாமியரான நான் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் செல்லக்கூடாது என்ற விதி உள்ளது; அந்த எல்லைக்குள் நான் செல்லவில்லை. இதுகுறித்து ஆர்டிஐ (RTI) போட்டு கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்" என்றார். மேலும், சட்டமன்றத்திலேயே மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்ய வேண்டும் எனத் தான் குரல் கொடுத்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு குறித்துப் பேசிய அவர், தமிழக மக்களுக்காகக் கடன் வாங்கித் திட்டங்கள் கொண்டுவருவது தவறு இல்லை; ஆனால் தி.மு.க.வினர் கொள்ளையடிப்பதற்காகவே கடன் வாங்கியுள்ளனர் எனக் குற்றம் சாட்டினார். கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும், வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் தவெக 100 சதவீதம் வெற்றி பெறும் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
- Madurai
கோவிலுக்குள் விதிகளை மீறி நான் செல்லவில்லை – MLA. முஸ்தபா
மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் விதிகளை மீறி நான் செல்லவில்லை – MLA. முஸ்தபா
