எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, விருதுநகரில் திமுகவினர் நடத்திய சாலை மறியல் போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர் பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள அண்ணா சிலை முன்பு, மேகதாது அணை மற்றும் காவிரி நீர் உரிமைப் பிரச்சினையை வலியுறுத்தி திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறி சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்ற காவல்துறையினர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றனர். அவர் மீது தஞ்சை காவல்துறையினர் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதைக் கண்டித்து விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு திமுகவினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ. சீனிவாசன், நகர மன்றத் தலைவர் மாதவன், நகரச் செயலாளர் தனபாலன் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றுத் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வாகிகளைப் போலீசார் கைது செய்து அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
- Virudhunagar
உதயநிதி ஸ்டாலின் கைது – விருதுநகரில் மறியல்
உதயநிதி ஸ்டாலின் கைது – விருதுநகரில் மறியல்
