திண்டுக்கல்லில் வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தழகுப்பட்டி புனித செபஸ்தியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பிரம்மாண்ட கறி விருந்து அன்னதானத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.
350 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான நேர்த்திக்கடன் அன்னதானம் நேற்று மாலை தொடங்கி விடிய விடிய வெகு விமர்சையாக நடைபெற்றது. தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதற்காக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 3,000 கோழிகள், 1,000 ஆடுகள், 300 மூடை அரிசி மற்றும் 500 கிலோ காய்கறிகளைக் கொண்டு இந்த உணவு தயாரிக்கப்பட்டது.
சிறப்பு என்னவென்றால், சமையல் செய்வதற்கும் பந்தி பரிமாறுவதற்கும் ஆட்கள் யாரும் அமர்த்தப்படுவதில்லை. முத்தழகுப்பட்டியைச் சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் மற்றும் மாணவ-மாணவிகள் தாமாக முன்வந்து காய்கறி நறுக்குவது, பெரிய அண்டாக்களில் சாதம் மற்றும் கறிக்குழம்பு சமைப்பது போன்ற அனைத்துப் பணிகளிலும் ஈடுபட்டனர்.
மலைபோல் குவிக்கப்பட்ட சாதம் மற்றும் கறிக்குழம்பு மாலை 7 மணி முதல் விடிய விடிய பக்தர்களுக்குப் பரிமாறப்பட்டது. திண்டுக்கல் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வருகை தந்த பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் இந்த ஆன்மிகக் கறி விருந்தில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
- Dindigul
பிரம்மாண்ட கறி விருந்து திருவிழா
திண்டுக்கல்லில் பிரம்மாண்ட கறி விருந்து திருவிழா
