விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகப் பொதுக்கூட்டத்தில் பேசிய விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் செல்வம், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் இயக்கத்திற்காக உழைத்த தொண்டர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, எம்.எல்.ஏ. செல்வம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுமார் 500 குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. குறிப்பாக, அண்மையில் கட்டனார்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் பெற்றோரை இழந்த 8 குழந்தைகளின் முழு கல்வி மற்றும் வாழ்வாதாரச் செலவுகளைத் தத்தெடுப்பதாக அவர் அறிவித்தார்.
தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அவர், உள்ளாட்சித் துறை நிர்வாகங்களின் முறைகேடுகளைச் சுட்டிக்காட்டினார். மேலும், "எவ்வளவு பெரிய மிட்டா மிராசுதாரர் அல்லது செல்வாக்கு படைத்தவர் வந்தாலும் உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு கிடையாது. கழகத்திற்காகவும் கட்சிக்காகவும் களத்தில் நின்று உண்மையாக உழைத்த எளிய தொண்டர்களுக்கு மட்டுமே கவுன்சிலர், பஞ்சாயத்துத் தலைவர் போன்ற பதவிகளுக்கான வாய்ப்புகள் வழங்கப்படும்" என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் ரசிக்குமார், வர்த்தக அணி செயலாளர் நாராயணன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்துகொண்டனர்.
- Virudhunagar
உள்ளாட்சித் தேர்தலில் உழைத்தவர்களுக்கே வாய்ப்பு
உள்ளாட்சித் தேர்தலில் உழைத்தவர்களுக்கே வாய்ப்பு – எம்.எல்.ஏ செல்வம்
