மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற தென்மண்டல திமுக வழக்கறிஞர்கள் கலந்துரையாட்டுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் திமுக சட்டத்துறைச் செயலாளர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திமுக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ, முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பி.மூர்த்தி மற்றும் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் பி.மூர்த்தி, நமது கவனக்குறைவு மற்றும் இறுமாப்பு காரணமாகவே தவெக ஆட்சிக்கு வந்ததாகக் குறிப்பிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது விவகாரத்தில் திமுக தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய தங்க தமிழ்செல்வன், ரீல்ஸ் மூலம் ஆட்சிக்கு வந்தவர்கள் எதையும் செய்யவில்லை என்றும், மக்களின் மௌனம் விரைவில் திமுகவிற்குச் சாதகமாக மாறும் என்றும் குறிப்பிட்டார்.
முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், 2001-ல் கலைஞர் கைது செய்யப்பட்டபோது ஏற்பட்ட உணர்வை ஒத்த எழுச்சி தற்போது உதயநிதி ஸ்டாலின் கைது மூலம் உருவாகியுள்ளதாகக் கூறினார். மேலும், இக்கட்டான சூழலில் திமுக வழக்கறிஞர் அணி சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மிகச் சிறப்பாகக் கையாண்டதாகப் பாராட்டு தெரிவித்தார்.
நிறைவாகப் பேசிய திமுக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ, ஆளுங்கட்சியின் முறைகேடுகளைச் சுட்டிக்காட்டியதுடன், எந்தச் சூழலிலும் தொண்டர்களுக்குப் பாதுகாப்பு வழங்கவும், சட்டப் போராட்டங்களை எதிர்கொள்ளவும் வழக்கறிஞர் அணி தயாராக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். மேலும், விரைவில் சென்னையில் திமுக வழக்கறிஞர் அணி மாநில மாநாடு நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
- Madurai
திமுக தென்மண்டல வழக்கறிஞர்கள் கூட்டம்
திமுக தென்மண்டல வழக்கறிஞர்கள் கூட்டத்தில் தலைவர்கள் பேச்சு
