விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களைப் பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, ரூ.4.62 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, விபத்து நிவாரணம், முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 641 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு அமருமிடத்திற்கு நேரில் சென்று ஆட்சியர் மனுக்களைப் பெற்றதுடன், அனைத்து மனுக்கள் மீதும் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன:
கருணை அடிப்படையில் பணி நியமனம்: பணியின்போது உயிர்நீத்த ஊரக வளர்ச்சித்துறை பணியாளரின் வாரிசுதாரருக்குப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை: 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4.38 லட்சம் மதிப்பிலான நவீன செயற்கை கால்களும், ஒருவருக்கு ரூ.24,000 மதிப்பிலான நான்கு சக்கர நாற்காலியும் என மொத்தம் ரூ.4.62 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஆனந்தி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பிர்தௌஸ் பாத்திமா மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
- Virudhunagar
ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – நலத்திட்ட உதவிகள் வழங்கல்
