திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம் பாறையில் கம்யூனிஸ்ட் கட்சியினரின் தகவல்களைச் சேகரிக்க உத்தரவிட்ட வட்டாட்சியரைக் கண்டித்தும், இடதுசாரி மாணவர் அமைப்புக்கு எதிரான சுற்றறிக்கை வெளியிட்ட தமிழகத் தலைமைச் செயலாளரைக் கண்டித்தும் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், "டெல்லி பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட மாணவர் போராட்டத் தடை சுற்றறிக்கையைத் தமிழகத் தலைமைச் செயலாளர் அப்படியே பின்பற்றி வெளியிட்டது அப்பட்டமான மோசடியாகும். இந்த உத்தரவுகளின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவின் அரசியல் சதி உள்ளது" எனத் கடுமையாகக் குற்றம்சாட்டினார்.
குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது வெறும் பணியிட மாற்ற நடவடிக்கை மட்டும் எடுப்பது கண் துடைப்பு நாடகம் எனவும், அவரை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து குற்றவியல் வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.அரசு நிர்வாகத்தை இடதுசாரி கட்சிகளுக்கு எதிராகத் திருப்புகின்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்தும், இதற்கு காரணமானவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
- Dindigul
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
