விருதுநகரில் நடைபெற்ற அதிமுக சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு உரையாற்றினார். பாவாலி ரோடு மருதூர் அய்யனார் கோவில் மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கட்சியின் தற்போதைய நிலை குறித்து அவர் பேசினார்.
அவர் பேசுகையில், ‘அதிமுக எக்காலத்திலும் அழியாத இயக்கம். பல துரோகங்களையும், பிரிவுகளையும் கண்ட இயக்கம் இது. தற்போது கட்சியை விட்டுச் செல்பவர்கள் அனைவரும் கொள்ளையடித்த கூட்டம், அவர்களின் வெளியேற்றம் அதிமுகவிற்கு ஒரு துப்புரவுப்பணி போன்றது. இப்போதுதான் கட்சி தெளிந்த நீரோட்டமாக மாறியுள்ளது என்று குறிப்பிட்டார்.
மேலும், தற்போதைய ஆட்சியைக் ‘கானல் நீர் ஆட்சி’ என்று விமர்சித்த அவர், ‘மக்களை ஏமாற்றிப் பெற்ற இந்த வெற்றி நிலைக்காது. எம்.ஜி.ஆர். காலத்தில் எப்படி அதிமுக மீண்டு வந்ததோ, அதேபோல் மீண்டும் எழுவோம். வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக நிச்சயம் நல்லாட்சியை அமைக்கும்’ என்று தொண்டர்களிடையே உற்சாகமாகப் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் விஜயகுமரன், நகரச் செயலாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்
