விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களுக்குக் குப்பைத் தொட்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில், பணிகளைச் சரியாகச் செய்யாத ஊராட்சி செயலாளர்களுக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாத சூழலில், ஊராட்சி செயலாளர்கள் முழுப் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்திய அவர், தான் பதவியேற்று 50 நாட்களாகியும் கிராமங்களில் தூய்மைப் பணிகளிலோ, குடிநீர் விநியோகத்திலோ எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என அதிருப்தி வெளியிட்டார். குப்பைகளைத் தரம் பிரிக்கும் மையங்களை உடனே உருவாக்க வேண்டும் என்றும், தண்ணீரைத் திருடுபவர்கள் மற்றும் விதிகளை மீறுபவர்களின் பட்டியலை அளித்தால் மாவட்ட நிர்வாகம் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும், தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்த அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த எம்.எல்.ஏ செல்வம், குப்பைகளைத் தரம் பிரித்து வழங்காத பொதுமக்களுக்கு 500 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், விதிகளைத் தொடர்ந்து மீறினால் சிறை தண்டனை பெற நேரிடும் என்றும் ஊராட்சி ஒன்றியம் சார்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
