விருதுநகர் அரசு மருத்துவமனை சிற்றுண்டி சாலை டெண்டர் முறைகேட்டை ரத்து செய்யக் கோரி, வரும் ஜூலை 17-ஆம் தேதி பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்து கட்சி மக்கள் போராட்ட குழு முடிவு செய்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், காங்கிரஸ் நிர்வாகி எட்வர்ட் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஜூலை 2-ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய மருத்துவமனை சிற்றுண்டி சாலை டெண்டர், விதிமுறைகளுக்கு முரணாக, அரசியல் தலையீட்டுடன் ஒருதலைப்பட்சமாக குறிப்பிட்ட நபருக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
எனவே, இந்த டெண்டரை உடனடியாக ரத்து செய்துவிட்டு, தகுதியானவர்களுக்கோ அல்லது மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கோ முன்னுரிமை வழங்கிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பழைய பேருந்து நிலைய அருகிலுள்ள மதுபானக் கடைகளை மூடக் கோரியும், பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15 அன்று விருதுநகரில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட வலியுறுத்தியும், ஜூலை 17 அன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாக இந்த வலுவான ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் சிபிஐ, மக்கள் நீதி மய்யம், ஆம் ஆத்மி, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
