திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதி சாணார்பட்டி அருகே உள்ள தேத்தாம்பட்டியில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் வினோத திருவிழாவான 'சலகெருது ஓட்டம்' எனப்படும் மாடு மாலை தாண்டும் விழா இரண்டு நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்றது.
குச்சம்மாள், சேலம்மாள், சின்னம்மாள், நாகம்மாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு, சிக்கமநாயக்கர் மந்தை பகுதியில் திண்டுக்கல், கரூர், திருச்சி பகுதிகளைச் சேர்ந்த 14 மந்தைகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இணைந்து விழாவை நடத்தினர். முதல் நாள் கிராம தெய்வங்களுக்குப் பூ வைத்தல், தீபாராதனை மற்றும் தேவராட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்களுடன் சுவாமி கோவிலுக்கு அழைத்து வரப்படும் நிகழ்வுகள் நடைபெற்றன.
இரண்டாம் நாளான இன்று சலகெருது எனப்படும் மாடு மாலை தாண்டும் விழா தொடங்கியது. இதில் 100-க்கும் மேற்பட்ட அலங்கரிக்கப்பட்ட மாடுகள் அழைத்து வரப்பட்டு, 2 கிலோமீட்டர் தூரத்திற்கு முன்பாகப் போட்டி தொடங்கப்பட்டு மாடுகள் விரட்டப்பட்டு ஓடவிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து இளைஞர்கள் கையில் கம்புகளுடன் உற்சாகமாகப் போட்டியிட்டு ஓடினர்.
இப்போட்டியில் எல்லைக்கோட்டை முதலிடமாகப் பிடித்த மாடுகளுக்குச் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த முதலிடம் பெறும் மாடு இந்த ஆண்டிற்கான 'சுவாமி மாடு' என்ற சிறப்பு மரியாதையுடன் போற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தேத்தாம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- Dindigul
தேத்தாம்பட்டியில் மாடு மாலை தாண்டும் விழா
நத்தம் அருகே தேத்தாம்பட்டியில் நடைபெற்ற மாடு மாலை தாண்டும் விழா
