தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை ஏற்படுத்தவும், திறமையான வீரர்களை அடையாளம் காணவும் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான தடகளப் போட்டிகளும், மாணவர்களுக்கான கபடிப் போட்டிகளும் உற்சாகமாக நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் போதையில்லா இளைஞர் சமூகத்தை உருவாக்கவும், சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தவும் பல்வேறு முன்னெடுப்புகள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 9 முதல் வருகிற செப்டம்பர் 30 வரை மாவட்ட விளையாட்டு அரங்கம் உட்பட 10 இடங்களில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்கும் வகையில் நடப்பாண்டில் வில்வித்தை, வுஷீ, துப்பாக்கிச் சுடுதல், யோகா, மல்லர்கம்பம், ஸ்பீடு ஸ்கேட்டிங் மற்றும் நீர் விளையாட்டுகள் (கயாக்யிங், கேனோயிங்) உள்ளிட்ட புதிய விளையாட்டுகள் சேர்த்து மொத்தம் 45 வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன.
மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3,000, இரண்டாம் பரிசாக ரூ.2,000, மூன்றாம் பரிசாக ரூ.1,000-த்துடன் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. மேலும், மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்குத் தனிநபர் பிரிவில் ரூ.1 லட்சம் வரையிலும், குழுப் போட்டிகளுக்கு ரூ.75,000 வரையிலும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இத்தொடரில், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு தடகளப் போட்டிகளும், மாணவர்களுக்கான கபடிப் போட்டிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றன. இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரமணிமாறன், பயிற்சியாளர்கள் மற்றும் ஏராளமான விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
- Virudhunagar
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கிய முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்
