திண்டுக்கல் மாநகராட்சி கழிவுநீர் நீரேற்று மையத்திலிருந்து வெளியேறிய நச்சு வாயுவால் மூச்சுத் திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு, பொதுமக்கள் இரண்டாவது நாளாக இன்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
குடைபாறைப்பட்டி அருகே உள்ள பிஸ்மி நகர் மற்றும் ஏபி நகர் பகுதிகளில், மாநகராட்சி கழிவுநீர் நீரேற்று மையம் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து திடீரென வெளியேறிய நச்சு வாயு காரணமாக, அப்பகுதி பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்குக் கடுமையான மூச்சுத் திணறலும், கண் எரிச்சலும் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நேற்று வத்தலகுண்டு சாலையில் பொதுமக்கள் நடத்திய மறியல் போராட்டம், அதிகாரிகளின் சமாதான பேச்சுவார்த்தைக்குப் பின் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. ஆனால், மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று காலை வரை எந்தவிதத் தொடர் நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மீண்டும் வத்தலகுண்டு சாலையில் திரண்டு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.
