மதுரையில் நடைபெற்ற நூலகத் திறப்பு விழாவில் பங்கேற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, தேசிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இரண்டு மொழிகள் போதுமானவை என்றும், மும்மொழிக் கொள்கை எதிர்காலத்தில் பிற மொழிகளைத் திணிப்பதற்கான வழியாக அமைந்துவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இன்றைய இளைஞர்களிடம் அறிவுத்திறனும், படைப்பாற்றலும் சிறப்பாக இருந்தாலும், சமூகப் பொறுப்புணர்வு குறைவாக இருப்பதாக வருத்தம் தெரிவித்த அவர், குடும்பங்களில் உறவுகளுக்கு இடையேயான பாசம் குறைந்து, பணத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் கவலை தெரிவித்தார்.
தமிழக முதலமைச்சரின் செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு, “காலம் போகட்டும் பார்ப்போம்; இதுவரை செயல்பாடுகள் நன்றாக இல்லை, இனி வரும் காலங்களில் சரியாக இருக்கலாம்” என்று தனது கருத்தைப் பதிவு செய்தார்.
சமுதாயத்தில் ஊழலும் லஞ்சமும் அதிகரித்திருப்பது, நம் நாட்டின் பண்பாட்டு மதிப்புகளைச் சிதைப்பதாகக் கூறிய அவர், கட்சிகளைக் கடந்து நாட்டின் முன்னேற்றத்திற்காக அனைவரும் பாடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
