மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில், “We the Leaders” அமைப்பு சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. ஐயப்பன் கோவிலில் தொடங்கிய இந்தப் பேரணி, மதுக்கடை அருகே நிறைவடைந்தது. பேரணியின் ஒரு பகுதியாக, சாலையில் மதுவை ஊற்றித் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்த நிர்வாகிகள், இளைஞர்களைப் போதையில் இருந்து மீட்க வலியுறுத்தினர்.
செய்தியாளர்களைச் சந்தித்த அந்த அமைப்பின் மதுரை ஒருங்கிணைப்பாளர் மகா. சுசீந்திரன், தவெக. அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் கூறியதாவது:
“பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள 716 மதுக்கடைகள் மூடப்படும் என்ற வாக்குறுதியை முதல்வர் விஜய் இன்றுவரை நிறைவேற்றவில்லை. தற்போதைய சூழலில், மக்களின் வாழ்வாதாரத்தைப் புரிந்துகொள்ளாமல், திரை பிம்பத்தோடே முதல்வர் செயல்படுகிறார். கரூரில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் உயிரிழப்புகளுக்கு முதல்வர் ஜோசப் விஜய் தான் பொறுப்பேற்க வேண்டும். இது ‘முக்கால் காலால் கட்டப்பட்ட மணல் கோட்டை’; இந்த ஆட்சி எப்போது வேண்டுமானாலும் சரியும், தவெக. அரசு அகற்றப்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை” என மிகக் காட்டமாகத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
