விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டத்தில், “உங்களைத் தேடி உங்கள் ஊரில்“ திட்டத்தின் கீழ் அரசின் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.
மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காணும் நோக்கில், நேற்று காலை 9 மணி முதல் 24 மணி நேரத் தொடர் கள ஆய்வை மாவட்ட ஆட்சித்தலைவர் மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக இரண்டாம் நாளான இன்று அதிகாலை, காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கான கூட்டு குடிநீர் திட்ட செயல்பாடுகளையும், திம்மன்பட்டி கிராமத்தில் குடிநீர் விநியோகப் பணிகளையும் அவர் நேரில் பார்வையிட்டார்.
தொடர்ந்து, மல்லாங்கிணறு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள், தூய்மைப் பணியாளர்களின் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் மற்றும் அம்ருத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டிப் பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.
அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர், சுகாதாரம் மற்றும் சாலைப் பணிகளை விரைவுபடுத்தவும், அரசு சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் மாரிமுத்து, காரியாபட்டி வட்டாட்சியர் திருப்பதி மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
