விருதுநகரில் இன்று (17.06.2026) நடைபெற்ற விழாவில், 288 மாற்றுத்திறனாளிகளுக்கு 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு. என்.ஓ. சுகபுத்ரா அவர்கள் வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகள் தன்னம்பிக்கையுடனும், சுயசார்புடனும் வாழ்வதை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் ‘தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின்’ கீழ், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பிசியோதெரபி, உளவியல் ஆலோசனை மற்றும் சிறப்புக் கல்வி உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.
விருதுநகர் மாவட்டத்தில் 13 இடங்களில் ஒருங்கிணைந்த மறுவாழ்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்போது 6 இடங்களில் இவை சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு உதவி உபகரணங்கள் NLC India Limited நிறுவனத்தின் சி.எஸ்.ஆர். (CSR) நிதியின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் செயல் இயக்குநர் மற்றும் மனித வள மேலாண் இயக்குநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கலந்து கொண்டனர். அரசு வழங்கும் இந்த உதவிகளை மாற்றுத்திறனாளிகள் முறையாகப் பயன்படுத்தி, தங்கள் வாழ்வை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
