மின்வாரியத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் லஞ்சம் கேட்டு மோசடியில் ஈடுபடும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சமூக ஆர்வலர் சங்கரபாண்டியன் கையில் அல்வாவுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தார்.
மதுரை செல்லூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சங்கரபாண்டியனைத் தொடர்பு கொண்ட மர்ம நபர், மின்வாரியத்தில் ஏ.இ., ஏ.டி., மற்றும் கணக்குப் பிரிவுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 8 முதல் 10 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கேட்டுள்ளார். தேர்வு எழுதாமல் வேலை வாங்கித் தருவதாகவும், முன்பணமாக 20 ஆயிரம் ரூபாய் தருமாறும் அவர் கூறியுள்ளார். இது போன்ற மோசடி நபர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்கக் கோரியும், பொதுமக்கள் ஏமாறாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆட்சியர் அலுவலகக் குறைதீர் கூட்டத்திற்கு அவர் அல்வாவுடன் வந்திருந்தார்.
தொடர்ந்து பொதுமக்களைச் சந்தித்த அவர், “முதல்வர் விஜய் லஞ்சம் கொடுக்கக் கூடாது என்று சொல்லியுள்ளார், காசு கொடுத்தால் அரசு வேலை என்று கூறி ஏமாற்றுபவர்களிடம் விழிப்புடன் இருங்கள்” என்று பொதுமக்களுக்கு அல்வா வழங்கி நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இளைஞர்களின் வேலைவாய்ப்பை வைத்து மோசடி செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்
