திருப்பரங்குன்றம் தொகுதி சோளங்குரணி கிராமத்தில் 21 ஆண்டுகளாகப் பாதை இல்லாமல் தவித்த மக்களுக்கு, அளித்த வாக்குறுதிப்படி பாதை அமைத்துக் கொடுத்த அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், அங்கு நடைபெற்ற கோவில் திருவிழாவில் பங்கேற்றார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “இது மக்கள் தேர்ந்தெடுத்த முதல்வர் அண்ணன் விஜயின் அரசு; பொதுமக்களுக்குத் தேவையானதைச் செய்வதுதான் இந்த அரசின் நோக்கம்” என்று குறிப்பிட்டார். மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதே முக்கியம் என்றும், மக்களின் வாழ்வாதாரத்திற்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையையும் இந்த அரசு எடுக்காது என்றும் அவர் உறுதியளித்தார்.
25 ஆண்டுகளாக மூட முடியாத குவாரியைத் தங்கள் அரசு மூடியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், “கிளீன் கவர்மெண்ட்” (Clean Government) என்பதே முதல்வரின் முதன்மையான நோக்கம் என்றும், லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராகத் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் இத்தகைய அறிவுறுத்தல்களையே வழங்கியதாகவும், மக்கள் சேவையே எங்களின் இலக்கு என்றும் அவர் கூறினார்.
மகளிர் உரிமைத் தொகை மற்றும் பட்ஜெட் குறித்த முடிவுகள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். கோவில் திருவிழா சூழலில் அரசியல் வேண்டாம் என்று தவிர்த்த அமைச்சர், வானில் விமானம் வட்டமடித்தது குறித்த கேள்விக்கு, அனுமதி கிடைக்காத காரணத்தினாலேயே அது நிகழ்ந்திருக்கலாம் என்று விளக்கம் அளித்தார்.
