விருதுநகர் கே.வி.எஸ். பழைய மாணவர் சங்கம் சார்பில், “போதையை ஓட ஓட விரட்டுவோம்” என்ற தலைப்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி இன்று சிறப்பாக நடைபெற்றது.
மதுரை சாலையில் உள்ள கே.வி.எஸ். மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கிய இந்தப் போட்டியில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், ஆண்கள், பெண்கள் என மொத்தம் 4,300 பேர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இப்பந்தயம் மொத்தம் ஐந்து பிரிவுகளாக நடத்தப்பட்டது. போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு செல்லும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு, பங்கேற்பாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், மாரத்தான் போட்டியில் கலந்துகொண்ட அனைத்துப் பங்கேற்பாளர்களுக்கும் பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டன.
