விருதுநகர் பேராலி ரோட்டில் அமைந்துள்ள தனியார் நூற்பாலையில் ஏற்பட்ட திடீர் மின் கசிவு காரணமாகப் பிற்பகலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்களும் பஞ்சு மூட்டைகளும் தீயில் எரிந்து சேதமாயின.
விருதுநகரைச் சேர்ந்த பாண்டியராஜனுக்குச் சொந்தமான இந்த நூற்பாலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மின்கசிவு ஏற்பட்டுத் தீ பரவியது; இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடினர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மூலமாகவும், தனியார் டிராக்டர் மூலமாகவும் தண்ணீரை வரவழைத்துத் தீ மேலும் பரவாமல் நீண்ட நேரம் போராடி அணைத்தனர்.
இந்த விபத்தில் நூற்பாலையில் இருந்த இயந்திரங்கள் மற்றும் பஞ்சுப் பொருட்கள் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.
இச்சம்பவம் குறித்து விருதுநகர் ஊரக காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Virudhunagar
நூற்பாலையில் மின் கசிவினால் பயங்கர தீ விபத்து
விருதுநகரில் நூற்பாலையில் மின் கசிவினால் பயங்கர தீ விபத்து – பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்களும் பஞ்சு மூட்டைகளும் தீயில் எரிந்து சேதமாயின
