விருதுநகர் அருள்மிகு ஸ்ரீ சொக்கநாத சுவாமி மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் 57-வது ஆவணிப் பெருந் திருவிழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள விஸ்வகர்மா சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட விருதுநகர் விஸ்வகர்மா ஐந்து வகுப்பு ஸ்ரீ காளியம்மன் கோயிலில் மண்டகப்படி வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இத்திருவிழாவில் ஸ்ரீ சொக்கநாத சுவாமி, ஸ்ரீ மீனாட்சி அம்மன், பிரியாவிடை, முருகப் பெருமான் மற்றும் விநாயகர் ஆகிய தெய்வங்கள் ஸ்ரீ காளியம்மன் கோயிலில் அமைக்கப்பட்ட மண்டகப்படியில் சிறப்பான முறையில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளித்தனர்.
கோயில் நிர்வாகம் சார்பில் சுவாமிகளுக்கு பல்வேறு மங்களப் பொருட்களால் சிறப்புத் திருமஞ்சனமும், கண்கவர் மலர் அலங்காரங்களும், தூப தீபாராதனைகளும் செய்யப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ஜெயலட்சுமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். மேலும், விஸ்வகர்மா ஐந்து வகுப்பு ஸ்ரீ காளியம்மன் கோவில் அறக்கட்டளை செயலாளர் ஆர். முத்துமணி பாண்டியன், துணைச் செயலாளர் சீனிவாசன், பொருளாளர் செந்தில் மற்றும் விஸ்வகர்மா சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் பக்தர்களும் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் நிறைவில், கோயில் நிர்வாகம் சார்பில் கலந்துகொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
- Virudhunagar
விஸ்வகர்மா மண்டகப்படி
ஸ்ரீ சொக்கநாத சுவாமி மீனாட்சி அம்மன் திருவிழா – விஸ்வகர்மா மண்டகப்படி
