மதுரை மாவட்டம், மேலூர் தொகுதிக்குட்பட்ட கீழையூர் ரெங்கசாமிபுரத்தில் பல ஆண்டுகளாக வசித்து வரும் ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு மின் இணைப்பு மற்றும் வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரியும், வீடுகளை இடிக்க முயல்வதைத் தடுத்து நிறுத்தக் கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கீழையூர் ரெங்கசாமிபுரத்தில் பத்துக்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் பல ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வரும் நிலையில், இதுவரை அப்பகுதிக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் இரவில் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகளின் ஆபத்துகளுக்கு மத்தியில் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடமும், மேலூர் தொகுதி அமைச்சர் விஸ்வநாதனிடமும் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறியுள்ள அப்பகுதி மக்கள், தற்போது அதிகாரிகள் தங்கள் வீடுகளை இடிக்க வருவதாகத் தெரிவித்துள்ளதாகக் குற்றம் சாட்டினர்.
வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வரும் தங்கள் வீடுகளை இடிக்கக் கூடாது என்றும், உடனடியாக மின் இணைப்பு மற்றும் வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தங்களுக்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரி அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
- Madurai
ஆதிதிராவிடர் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
மின் இணைப்பு & பட்டா கோரி ஆதிதிராவிடர் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
