உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேகப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ. முஸ்தபா, கும்பாபிஷேக ஏற்பாடுகள் குறித்தும், அரசியல் விவகாரங்கள் குறித்தும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்தார்.
அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கும்பாபிஷேகப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்த எம்.எல்.ஏ. முஸ்தபா, வரும் 11-ஆம் தேதி கோவில் நிர்வாகம் சார்பில் விரிவான விளக்கம் அளிக்கப்படும் என்றார். மேலும், பக்தர்களின் பாதுகாப்புக்காகச் சிசிடிவி கேமராக்களை அதிகரிப்பது, குழந்தைகளுக்கான அடையாள வில்லைகள் (Tags) வழங்குவது மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் எல்.இ.டி திரைகள் மூலம் நேரலை ஒளிபரப்பு செய்வது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
கும்பாபிஷேகத்திற்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மதுரை மாவட்டத்தில் ஓரிரு நாட்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கக் கோரப்பட்டுள்ளதாகவும், தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்திலும் திமுகவினர் 'ஸ்டிக்கர்' ஒட்டும் வேலையில் ஈடுபட முயல்வதாகக் குற்றம் சாட்டிய அவர், கடவுள் வழிபாட்டில் அரசியல் செய்யக் கூடாது என்றார். மேலும், இசுலாமியர்களின் பாதுகாப்பு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாகக் குறிப்பிட்ட அவர், திமுகவினர் முதியோர் கூடாரமாக மாறிவிட்டதாகவும், தமிழகத்தில் இனி எந்தக் காலத்திலும் திமுகவால் ஆட்சிக்கு வர முடியாது என்றும் தெரிவித்தார்.
- Madurai
திமுக ஸ்டிக்கர் ஒட்ட முயற்சிக்கிறது
மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் – திமுக ஸ்டிக்கர் ஒட்ட முயற்சிக்கிறது
