விருதுநகர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்து நாடார்கள் தெப்பக்குளத்தில் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ராட்சதக் கிணற்றில் சிக்கிய 22 கிலோ எடையுள்ள நெய்வாழை மீன் பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 2005-க்குப் பிறகு தூர்வாரப்படாமல் தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசி வந்ததால், குளத்தை முழுமையாகத் தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் இந்து நாடார்கள் தேவஸ்தானத்தை வலியுறுத்தினர். இதனையடுத்து, கடந்த ஒரு வாரமாக மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டுத் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
குளத்தில் நீர் முழுமையாக வற்றடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள மீன்களைப் பிடிக்கும் பணி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தெப்பக்குளத்தின் பெரிய கிணற்றில் சிக்கிய சுமார் 22 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட நெய்வாழை மீன் மீனவர்கள் வலையில் பிடிபட்டது.
ஆச்சரியத்துடன் பொதுமக்கள் பார்த்துச் சென்ற இந்த நெய்வாழை மீனுடன், கெண்டை, கட்லா, மிருகால், ரோகு மற்றும் விரால் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களும் பிடிக்கப்பட்டு பொதுமக்கள் மத்தியில் உற்சாகமாக ஏலம் விடப்பட்டன.
- Virudhunagar
தெப்பக்குளத்தில் 22 கிலோ எடையுள்ள மீன் பிடிபட்டது
விருதுநகர் தெப்பக்குளத்தில் 22 கிலோ எடையுள்ள நெய்வாழை மீன் பிடிபட்டது
