கருவூலம் மூலம் ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகரில் நகராட்சி ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
நகராட்சி மற்றும் மாநகராட்சி ஊழியர்களுக்குக் கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்; காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்; அலுவலக நேரம் கடந்தும், சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவதை முழுமையாகக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மேலும், பணியிட மாறுதல்கள் மற்றும் பதவி உயர்வு மாறுதல்களைக் கலந்தாய்வு மூலம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்றும், அரசாணை எண். 152 மற்றும் 10-ன் படி அலுவலக உதவியாளர், ஓட்டுநர், குடிநீர் பிரிவு மற்றும் தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட அடிப்படைப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஊழியர்கள் அனைவரும் தற்செயல் விடுப்பு எடுத்துப் போராட்டத்தில் பங்கேற்றதால், விருதுநகர் நகராட்சி அலுவலகம் முழுவதும் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டதுடன், பொதுமக்களின் வழக்கமான அலுவலகப் பணிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
- Virudhunagar
நகராட்சி ஊழியர்கள் தற்செயல் விடுப்புப் போராட்டம்
விருதுநகரில் நகராட்சி ஊழியர்கள் தற்செயல் விடுப்புப் போராட்டம்
