மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் கும்பாபிேஷகத் தேதியை மாற்ற வேண்டும், குறிப்பிட்ட சிலரை அனுமதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையைச் சேர்ந்த ராம. ரவிக்குமார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
மதுரை பேரையூரைச் சேர்ந்த ராம. ரவிக்குமார் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், கும்பாபிஷேக தினத்தன்று உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும், அழைப்பிதழில் முதல்வர் படம் நீக்கப்பட்டு உபயதாரர்களின் பெயர்கள் இடம்பெற வேண்டும் என்றும் கோரியுள்ளார். மேலும், இஸ்லாமியரான மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ. முஸ்தபாவைக் கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது எனவும், துக்கத் தடையைக் காரணம் காட்டித் திருப்பரங்குன்றம் கோவில் ராசா பட்டரை யாகசாலை பூஜைகளில் அனுமதிக்கக் கூடாது எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மனு அளித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த ராம. ரவிக்குமார், குடமுழுக்கு நடைபெறும் தேதி 'சூனிய திதியில்' இருப்பதால் தவெக ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் என எச்சரித்தார். மேலும், அமைச்சர் நிர்மல் குமார் அதிகார வரம்பை மீறிச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டிய அவர், "விஜய் முதல்வராக இருந்தாலும் மீனாட்சி அம்மனை விடப் பெரிய ஆள் கிடையாது" எனவும் தெரிவித்தார்.
கங்கை, கோதாவரி உள்ளிட்ட நதிகளில் இருந்து புனிதத் தீர்த்தத்தைக் கொண்டு வந்து கலசங்களில் சேர்க்க வேண்டும் என்றும், கும்பாபிஷேகத்திற்குப் பிறகு சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
- Madurai
மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிேஷகம் – ஆட்சியரிடம் மனு
மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிேஷகம் – ஆட்சியரிடம் மனு – ராம ரவிக்குமார்
