முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினரான பி.கே.மூக்கையாத்தேவரின் 47-வது நினைவுநாளை முன்னிட்டு, உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்திலுள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சர் நிர்மல்குமார் தலைமையில் 10 எம்.எல்.ஏ.க்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்துப் பேசினார்.
அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்துப் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், ஊழல் செய்தோ அல்லது தவறு செய்தோ இருந்தால் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என்றார். பணம் பெற்றுக்கொண்டு வேலைக்கு அமர்த்தப்பட்டதாகக் கிடைத்த ஆதாரப்பூர்வமான தகவல்களின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இதில் எந்தவிதமான அரசியல் காழ்ப்புணர்ச்சியும் இல்லை எனக் குறிப்பிட்டார்.
உசிலம்பட்டி பேருந்து நிலையப் பணிகள் முடங்கியது திமுக நிர்வாகிகளின் காழ்ப்புணர்ச்சியால் நடந்தேறிய ஒன்று என்றும், அதனைச் சரி செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும், 58 கால்வாய்க்கு நிரந்தர அரசாணை வழங்கத் தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
மேகமலை விவகாரத்தில் உண்மை நிலையை நீதிமன்றத்தில் எடுத்துரைத்து அப்பகுதி மக்களுக்கு நல்ல தீர்வு பெற்றுத் தரப்படும் என்றார். மேலும், கம்யூனிஸ்ட் கட்சியினரின் கருத்துகள் குறித்து மாநில நிர்வாகிகளுடன் பேசி வருவதாகவும், அவர்களுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.
- Virudhunagar
உசிலம்பட்டியில் அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி
உசிலம்பட்டியில் அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி
