கேரள மாநிலம் திருச்சூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 8 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணவன் சூர்யாவின் உடல் சொந்த ஊருக்குக் கொண்டுவரப்பட்டு உறவினர்களின் கண்ணீருக்கு இடையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரியில் பயின்று வந்த சூர்யா, சந்தோஷ், விஷ்வா ஜீவா, யுவசஞ்சித், பிரசன்னா, முரளி, கிருஷ்ணன், ஜோஸ்வாகில்சன் ஆகிய 8 மாணவர்கள் காரில் திருச்சூருக்குச் சென்றனர். நள்ளிரவில் அவர்கள் சென்ற கார் லாரி மீது மோதியதில் 8 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பிரேத பரிசோதனைக்குப் பிறகு மாணவர்களின் உடல்கள் திண்டுக்கல், கோபால்பட்டி, ஒட்டன்சத்திரம், சேலம் மற்றும் மதுரை ஆகிய சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில் திண்டுக்கல் வாழைக்காய் பட்டியைச் சேர்ந்த மாணவன் சூர்யாவின் உடல் மின்மயானத்திற்குக்கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. பெற்றோர் மற்றும் உறவினர்களின் கதறல் காண்போரை மீளாத்துயரில் ஆழ்த்தியது.
ஏழ்மையான குடும்பச் சூழலில் படித்து, வளாகத் தேர்வில் நல்ல வேலையைப் பெற்றிருந்த மாணவன் சூர்யா உள்ளிட்ட 8 மாணவர்களின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, உயிரிழந்த மாணவன் சூர்யாவின் கல்விக் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், விபத்தில் பலியான 8 மாணவர்களின் குடும்பங்களுக்கும் தமிழக மற்றும் கேரள அரசுகள் உரிய இழப்பீடு வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- Dindigul
பிஎஸ்என்ஏ கல்லூரி மாணவன் சூர்யா உடல் திண்டுக்கலில் நல்லடக்கம்
பிஎஸ்என்ஏ கல்லூரி மாணவர்கள் சாலை விபத்து – மாணவன் சூர்யா உடல் திண்டுக்கலில் நல்லடக்கம்
