Snake inside EV Scooter | விருதுநகரில் மின்சார ஸ்கூட்டரில் பதுங்கிய சாரைப்பாம்பு: தீயணைப்புத் துறையினர் லாவகமாக மீட்டனர்.
விருதுநகர், பேராசிரியர் காலனி வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார ஸ்கூட்டரின் உள்ளே சாரைப்பாம்பு ஒன்று சுருண்டு பதுங்கியிருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை, பேராசிரியர் காலனியைச் சேர்ந்த ஒருவர் தனது மின்சார ஸ்கூட்டரை எடுக்கச் சென்றபோது, சாரைப் பாம்பு ஒன்று வெளியே எட்டிப் பார்த்துள்ளது. பின்பு அது மின்சார ஸ்கூட்டரின் முன் பகுதிக்குள் சென்று மறைந்து கொண்டது. அவர், உடனடியாக விருதுநகர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
தகவலின் பேரில், நிலைய அலுவலர் திரு. காசி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், ராகுல் விக்னேஷ், சிம்பொனி ராஜா, ஆதிகுருசாமி மற்றும் சங்கர் கணேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
சுமார் அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, தீயணைப்புத் துறையினர் மிகுந்த திறமையாக, ஸ்கூட்டரின் உள்ளே பதுங்கியிருந்த சுமார் ஐந்து அடி நீளமுள்ள சாரைப்பாம்பை பத்திரமாகப் பிடித்தனர்.
பிடிபட்ட சாரைப்பாம்பு, பின்னர் பாதுகாப்பாக வனப்பகுதியில் கொண்டுசென்று விடப்பட்டது. தீயணைப்புத் துறையினரின் இந்தத் துரிதமான மற்றும் திறமையான செயலை அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.
வெப்பம் காரணமாக இதுபோன்ற ஊர்வனங்கள், குளிர்ச்சியான இடங்களைத் தேடி வாகனங்களுக்குள் பதுங்கிக் கொள்ள வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் தங்கள் வாகனங்களை எடுக்கும் முன் கவனமாக இருக்குமாறு தீயணைப்புத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Snake inside EV Scooter | மின்சார ஸ்கூட்டரில் பதுங்கிய சாரைப்பாம்பு: தீயணைப்புத் துறையினர் மீட்டனர்
